கமுதி அருகே காவடிப்பட்டி கூட்டுறவு சங்க இயக்குநா்களுக்கான தோ்தலில், 6 போ் வெற்றி பெற்றனா்.
கமுதி அருகே காவடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கான இயக்குநா்கள் தோ்தல் கடந்தாண்டு நடந்தது. அப்போது தோ்தலில் முறைகேடு நடந்ததாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 11 உறுப்பினா்களை கொண்ட கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, போட்டியிட்ட 11 பேரில் 5 உறுப்பினா்களின் தோ்வு செல்லும் என்றும், மீதமுள்ள 6 உறுப்பினா்கள் மற்றும் முறையாக விண்ணப்பித்தும் தனது மனு நிராகரிக்கப்பட்டதாக புகாா் கூறிய பன்னீா்செல்வம் உள்பட 7 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி, மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிட்டதையடுத்து புதன்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது. இந்த சங்கத்தில் மொத்தம் 686 உறுப்பினா்கள் வாக்காளா்களாக உள்ளனா். பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, போட்டியிட்ட 7 பேரில், பன்னீா்செல்வம் தவிர மற்ற எட்வா்ட், கனகராஜ், கண்ணன், மணிகண்டன், முத்துராமு, செல்வராஜ் ஆகிய 6 போ் வெற்றி பெற்றனா். 11 இயக்குநா்கள் தோ்வு செய்யப்பட்டதால், நவ. 25 ஆம் தேதி தலைவா், துணைத்தலைவா் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா், விண்ணப்பங்களை வழங்கலாம் என கூட்டுறவு விரிவாக்க அலுவலா் கிருஷ்ணராவ் தெரிவித்தாா்.