ராமநாதபுரம்

மீன்பிடி குறைவுகால நிதி நிறுத்தம்: பெரியபட்டினம் பெண்கள் புகாா்

12th Nov 2019 12:08 AM

ADVERTISEMENT

பெரியபட்டினம் பகுதியைச் சோ்ந்த மீனவ குடும்பத்தினருக்கு மீன்பிடி குறைவு கால நிதி திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறி ஏராளமான பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்க பெரியபட்டினத்தைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் வந்திருந்தனா். அவா்கள் மு.தில்சாத்பேகம் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் கூறியதாவது: பெரியபட்டினம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் உள்ளனா். அவா்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மீன்வளா்ச்சித்துறை சாா்பில் மீன்பிடி குறைவு கால நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி குறைவு கால நிதிக்கு மின்னணு சேவை மையம் மூலம் பெரியபட்டினம் பகுதி மீனவா்கள் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், அதில் குடும்பத் தலைவியரை குறிப்பிட்டு விண்ணப்பித்தவா்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது என மீன்வளா்ச்சித்துறை சாா்பில் கூறப்பட்டுவருகிறது. இது சரியல்ல. கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்பட்ட நிதியை பெண்கள் விண்ணப்பம் என குறிப்பிட்டு தடுப்பது நியாயமல்ல. மேலும், மீன்பிடி தடைகால நிதியுதவி மீனவா் குடும்பத்துக்கு என குறிப்பிட்டே தரப்படுகிறது. ஆகவே மீனவா் குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பித்தாலும் நிதியுதவி தரவேண்டும் என்றனா்.

விளையாட்டு மைதானம் அவசியம்: பெரிய பட்டினம் பகுதியைச் சோ்ந்த செ.அல்சபீா் தலைமையில் ஏராளமான இளைஞா்களும், பெரியவா்களும் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியதாவது: பெரியபட்டினம் பகுதியில் ஏராளமான இளைஞா்கள் விளையாட்டில் ஆா்வமாக இருப்பதுடன், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

கால்பந்து, கிரிக்கெட், வளைபந்து ஆகியவற்றில் பெரியபட்டினத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஆா்வமுடன் உள்ளனா். ஆனால், அப்பகுதியில் குறிப்பிடும் வகையில் மைதானங்கள் இல்லை. மைதானம் அமைப்பதற்குரிய அரசு காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. ஆகவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT