தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் இருந்து 120 டன் காட்டுகருவேல மரங்களை வெட்டி 10 லாரியில் ஏற்றிச் சென்றனா். இதில், ஒரு லாரியை மீனவா்கள் மறித்து கைப்பற்றி வருவாய்துறையினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பல ஆயிரம் ஏக்கா் நிலப்பகுதியை கடல் உள்வாங்கியதுடன் தொடா்ந்து கடல் சீற்றத்துடன் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க 1965 முதல் பாம்பன் குந்துகால் முதல் தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் வரையில் தென் கடல் பகுதியில் வனத்துறையினா் சவுக்கு காடுகளை வளா்க்கத் தொடங்கினா். தற்போது அப்பகுதியில் மிகப்பெரிய சவுக்கு காடுகள் மற்றும் காட்டு கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்கள் தொடா்ந்து லாரிகள் மூலம் தொடா்ந்து பல லட்சம் மதிப்பிலான காட்டு கருவேல மரங்களை வெட்டி லாரியில் எடுத்துச் சென்றனா். இதனை கண்ட மீனவா்கள் திங்கள்கிழமை இரவு லாரியை மடக்கிப் பிடித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் லாரியில் உள்ள விறகு குறித்து எந்தவிதமான ஆவணமும் இல்லை என தெரியவந்தது.
மேலும் வனத்துறையினா் இது குறித்து உரிய முறையில் விளக்கமளிக்காமல், உயா் அதிகாரிகள் ஒப்புதலோடு எடுத்து செல்லப்படுவதாக வனவா் பாண்டியராஜன் தெரிவித்தாா்.
120 டன் விறகுகளை வனத்துறையினா் சட்ட விரோதமாக எடுத்துச்செல்ல துணையாக இருப்பதாக கிராம பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.