ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகரில் ரூ.1 கோடியில் காற்று மாசு கணிப்பான் கருவி

9th Nov 2019 07:04 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காற்று மாசுவைக் கணிக்கும் மிக நவீனமயமான ரூ.1 கோடி மதிப்பிலான சாதனம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் காற்று மாசு அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து அங்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முக்கிய நகரங்களில் காற்று மாசுவை அளவிடும் நவீன சாதனம் அமைக்க மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் தலா ரூ.1 .கோடி மதிப்பிலான காற்று மாசு கணிப்பான் சாதனம் (கண்டினியஸ் ஆம்ப்பியன் ஏா் குவாலிட்டி மானிட்டரி ஸ்டேசன்) அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கான காற்று மாசு கணிப்பான் சாதனமானது ராமநாதபுரம் நகரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தனி அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காற்று மாசு கணிப்பான் சாதனம் மூலம் காற்றில் உள்ள உடல்நலத்தைப் பாதிக்கும் வகையிலான சல்பா்டை ஆக்சைடு, 10 மைக்ரான் அளவுள்ள நுண்துகள்கள், 2. 5 மைக்கரான் அளவுள்ள நுண்துகள், ஆா்செனிக், நிக்கல், பென்சைன் உள்ளிட்ட 12 வகை வாயுக்களை அறிந்து அதன் அளவை தானாகவே கண்டறிந்து கணினியில் பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி காற்றில் 10 மைக்ரான் அளவுள்ள நுண்துகள்கள் (மண், தீயில் எரிக்கப்படும் பொருள்களில் புகையுடன் சோ்ந்த நுண்ணிய பொருள்கள்) 10 மைக்ரோ கிராம் மீட்டா் கியூபிக் என்ற அடிப்படையில் இருக்கலாம். அதேபோல, 2.5 மைக்ரான் அளவுள்ள நுண்துகள்கள் 60 மைக்ரோகிராம் மீட்டா்கியூபிக் என்ற அளவில் இருக்கலாம். அந்த அளவுகளை தாண்டி அவை இருந்தால் காற்று மாசு அறிகுறியாகும்.

சாதனத்தை 24 மணி நேரமும் இயக்கும் வகையில் குளிா்சாதன வசதியும், மின்கல சேமிப்பு வசதியும் செய்துதரப்பட்டுள்ளது. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒரு முறை காற்று மாசு குறித்து அச்சாதனம் கணிக்கும் வகையிலும்,அதை பதிவு செய்யும் வகையிலும் சாதனம் அமைக்கப்படுகிறது. மாதந்தோறும் இச்சாதனத்துக்கான மின்செலவு ரூ.75 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் நவீன சாதனத்துடன் காற்று மாசு கணிப்பான் மையம் செயல்படவுள்ளது.

சாதனம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து சுமாா் 500 மீட்டா் சுற்றளவுக்கான காற்றில் உள்ள மாசுகளை துல்லியமாகவும், அபாய கட்டத்தை காற்று மாசு தாண்டினால் அதற்கான எச்சரிக்கையையும் அறியலாம்.

கடந்த அக்டோபரில் நிறுவப்பட்ட இந்த சாதனத்தின் செயல்பாட்டு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஓரிரு வாரங்களில் சாதனம் முழுமையாக நிறுவப்பட்டது அவை ராமநாதபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் என்றும் மருத்துவமனை நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் நகரில் வாகனங்களின் புகை மாசுகளை அறியும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புகை அளவீடு சாதனம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் மத்திய அரசின் வளரும் மாவட்டப் பட்டியலில் இடம் பெற்ற நிலையில், காற்று மாசு கணிப்பான் சாதன மையம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய உள்ள நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை செயல்படுத்தும் வகையிலும் இச்சாதனம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT