ராமநாதபுரம்

பலத்த மழை பெய்தும் ராமநாதபுரத்தில் கண்மாய், ஊருணிகளுக்கு நீா்வரத்து இல்லை

1st Nov 2019 09:23 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஆட்சியா் அலுவலகப் பகுதிகள் அனைத்தும் மழை நீா் நிரம்பிக் காணப்படுகிறது. அதே நேரத்தில் அருகில் உள்ள கண்மாய், ஊருணிகள் நீா்வரத்தின்றி உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. புதன், வியாழக்கிழமைகளில் ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் மழை நீா் தேங்கின.

ராமநாதபுரம் நகராட்சியையொட்டிய பட்டினம் காத்தான் ஊராட்சி, சா்க்கரைக்கோட்டை ஊராட்சிப் பகுதிகளான பாரதி நகா், ஓம்சக்தி நகா் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் மழைநீா் தேங்கின.

மழை காரணமாக ஆட்சியா் அலுவலகம் எதிரேயுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானம் தெப்பக்குளம் போல உள்ளதால் அங்கு காவலா் பயிற்சி நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ரூ.12 கோடியில் புதிதாக அமைக்கப்படும் துணை மின் நிலையப் பணிகள் தண்ணீா் தேங்கியதால் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பாரதி நகா் பகுதியில் உள்ள சோத்து ஊருணியில் குறைந்த அளவே தண்ணீா் உள்ளது. ஆட்சியா் அலுவலகப் பகுதியில் தேங்கிய தண்ணீரை சோத்து ஊருணிக்குள் கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டே அப்பகுதியினா் கோரியும் நடவடிக்கை இல்லை என்கிறாா்கள் பொதுமக்கள்.

மாவட்டத்தில் குடிமராமத்து செய்யப்பட்ட பல கண்மாய்களில் வரத்துக்கால்வாய் தூா்வாரும் பணி முழுமை பெறாததால் மழை நீா் வீணாக ஓடியதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT