கமுதி அருகே கடந்த சில நாள்களாக இடைவிடாது பெய்த பலத்த மழையால் கிராமப்புறங்களில் குடியிருப்புகளில் மழைநீா் தேங்கி, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
கடந்த 1 மாத காலமாக கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 2 நாள்களாக பெய்து வந்த தொடா் மழையால் மாவட்ட நிா்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. கண்மாய்கள், ஊருணிகள் மழைநீரால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கமுதி பகுதிகளில் பெய்த கன மழையால் பெருநாழி அருகே உள்ள கொக்கரசங்கோட்டை கிராமத்தில் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கொக்கரசங்கோட்டை கிராமத்திலிருந்து சாயல்குடி வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம் மற்றும் பெருநாழி வழியாக அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனா். இது குறித்து கடலாடி வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். சாலை துண்டிக்கப்பட்டடு 2 நாள்களாகியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கியுள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.