ராமநாதபுரம் நகராட்சி விரிவாக்கத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை முட்டுக்கட்டை: வளர்ச்சி தடைபடுவதாக பொதுமக்கள் ஆதங்கம்

ராமநாதபுரம் நகராட்சி எல்லை விரிவாக்க நடவடிக்கைக்கு ஊரக வளர்ச்சித்துறை எதிர்ப்பு தெரிவிப்பதால்,

ராமநாதபுரம் நகராட்சி எல்லை விரிவாக்க நடவடிக்கைக்கு ஊரக வளர்ச்சித்துறை எதிர்ப்பு தெரிவிப்பதால், அத்திட்டத்தை தற்போது செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ராமநாதபுரம் நகர எல்லை விரிவாக்கப்படும் என அறிவித்ததுடன்,  பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரங்கோட்டை, சக்கரக்கோட்டை ஆகிய ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ராமநாதபுரம் பேரூராட்சியானது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதை சிறப்பு நிலை நகராட்சியாக்க வேண்டும் எனில் ரூ.10 கோடி ஆண்டு வருவாய் இருக்க வேண்டும். ஆனால், நகராட்சியின் 33 வார்டுகளில் ஆண்டுக்கு நியாயமான வரி விதிப்பின்படி,  ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரையே வருவாய் கிடைக்கும். ஆகவே முதல்வர் அறிவிப்பின்படி 4 ஊராட்சிகளை இணைத்தாலே வருவாய் ரூ.10 கோடியைத் தாண்டும் எனக் கூறப்பட்டது. 
வருவாய் கூடுதலாகும் வகையில் ராமநாதபுரம் நகராட்சி எல்லை விரிவாக்கப்பட்ட பிறகே சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கியிருக்க வேண்டும். ஆனால், திடீரென கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. சிறப்பு நிலை அந்தஸ்தால் கூடுதல் நிதி ஏதும் கிடைக்காது என்கிறார்கள் அதிகாரிகள். ஆகவே,  நகராட்சியின் பழைய 33 வார்டு மக்களிடமே ஆண்டுக்கு ரூ.10 கோடியை வசூலிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால், குப்பை வரி போன்ற புதிய வரிகளை விதித்தும், ஏற்கெனவே உள்ள சொத்துவரி உள்ளிட்டவற்றை உயர்த்தியும் நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரகப் பகுதிகளை நகர்களுடன் இணைப்பதால், ஊரக வளர்ச்சித்துறையே இல்லாத நிலை ஏற்படும் என்பதால், மாநில அளவில் ஊரகப் பகுதிகளை நகரப் பகுதிகளுடன் இணைக்க ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதனால், ராமநாதபுரம் நகர் விரிவாக்கமானது தற்போது தடைபட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது. 
ராமநாதபுரம் நகரானது சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவும்,  64 ஆயிரம் மக்கள் தொகையும் கொண்டதாகும். இங்கு நாளுக்கு நாள் பெருகிவரும்  வாகன எண்ணிக்கையால்,  சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கழிவு நீர் அகற்றுதல், குப்பை அகற்றுதல் போன்ற சுகாதார பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தீர்வு காண பேருந்து நிலையம், காய்கறி, மற்றும் மீன் சந்தைகளை ஊரகப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நகராட்சி எல்லை விரிவாக்கம் அவசியமாகும்.  
புதிய திட்டங்களை தற்போதைய நகர் எல்லையில் செயல்படுத்த இடமில்லை. ஆகவே பட்டணம்காத்தான் போன்ற ஊராட்சிகளில் செயல்படுத்தினால் அதன் வருவாய் நகராட்சிக்கு கிடைக்காது. இதனால், வளர்ச்சித் திட்டங்கள் தடைபடும் நிலை ஏற்படும். ஆகவே ராமநாதபுரம் நகராட்சி எல்லையை விரிவாக்கினால் மட்டுமே நகரின் வரிவசூல் நியாயமாக நிர்ணயிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன்,  நகரின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களுக்கான சூழல் உருவாகும் என்கிறார்கள் பொதுமக்கள். 
இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகள் கூறியது: நகராட்சி எல்லை விரிவாக்கம் குறித்து மாநில அரசு உயர்மட்டத்தில் மட்டுமே முடிவெடுக்க இயலும். ராமநாதபுரம் நகராட்சி எல்லை விரிவாக்கப்பட்டாலே புதிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான சூழல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை 
என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com