மின்சாரம் துண்டிப்பு: ஆறு மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

கமுதி அருகே காற்றில் மின் கம்பம் முறிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கடந்த 6 மாதங்களாக ஆரம்ப

கமுதி அருகே காற்றில் மின் கம்பம் முறிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கடந்த 6 மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் முறிந்த மின் கம்பமும் சரி செய்யப்படாமலேயே உள்ளது.
கமுதி அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டியில், வடுகபட்டி, முத்துப்பட்டி, இடைச்சியூரணி உள்பட 12 கிராம மக்களின் கர்ப்பிணிகள், நோயாளிகளுக்காக 2010 இல், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கமுதி பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தததால், பெருமாள்தேவன்பட்டி ஆரம்ப சுகாதார  நிலையம் முன்பு இருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதே சமயம், அப்பகுதியிலுள்ள விவசாய மோட்டார்கள், தெரு விளக்குகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. உயரழுத்த மின்கம்பிகள் அப்பபடியே தரையில் கிடந்ததால், சுகாதார நிலையம் மூடப்பட்டு, தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாகியும் முறிந்து விழுந்த மின்கம்பம் சீரமைக்கப்படவில்லை. 
இது குறித்து கமுதி மின்வாரிய தெற்கு உதவி பொறியாளர் முருகன் கூறியதாவது: சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மருத்துவத் துறை சார்பில் அதற்கான கட்டணத்தை செலுத்த முன் வரவில்லை. மேலும் சுகாதார நிலையம் சார்பில் மின் இணைப்பு தேவையில்லை என கூறிவிட்டனர். அந்த கட்டடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சீரமைப்பதற்கான  செலவுத்தொகையை கமுதி மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தினால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். 
கமுதி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் நாகரஞ்சித் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மின்வாரியத்துக்கு ஏற்கெனவே செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி உள்ளது.  இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். பழைய மின் இணைப்பிற்கு பதிலாக புதிய மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மருத்துவத்துறையில் இருந்து நிதி வந்த பின்  விரைவில் மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். 
பணியாளர்கள் தங்குவதற்கு அவசியமில்லாததால் மின் இணைப்பு அவசியம் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்று 
செல்கின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com