பெண் தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து கமுதி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

கமுதி அருகே தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி,

கமுதி அருகே தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, செவ்வாய்க்கிழமை கமுதி அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கமுதி அடுத்துள்ள அபிராமம் அருகே டி.வல்லக்குளத்தை சேர்ந்த மாயாண்டி மகள் ராதிகா (22). இவருக்கும் பார்த்திபனூர் அருகே பிச்சப்பனேந்தல் அருண்குமாருக்கும் (30), இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. 
 இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழும் நிலையில், ராதிகா டி.வல்லக்குளத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் டி.வல்லக்குளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பில், திங்கள்கிழமை காலை இருவரும் தனியாக இருந்தபோது, கிராமத்தினர் பார்த்து, கண்டித்துள்ளனர். 
இதனால் ராதிகா, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 
 அபிராமம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 
இந்நிலையில், ராதிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரியும், உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு உடலை வாங்க மறுத்தனர். 
இதையடுத்து அவர்களை சமாதானம் செய்ய வந்த கமுதி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்திடம், ராதிகாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். 
ராதிகாவின் உடல் கமுதி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. 
மேலும் டி.வல்லக்குளத்தில், 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை காலை ராதிகாவின் உடல் பெற்றோரிடம்  ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com