உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு: வாக்குச்சாவடிகள் விவரம் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி விவரம் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி விவரம் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார். 
இக்கூட்டத்தில், வரைவு வாக்குச்சாவடி விவரங்களை வெளியிட்டு அவர் கூறியதாவது: 
மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்திடவும், வாக்குச் சாவடிப் பட்டியலை இறுதி செய்திடவும் அறிவுரை வழங்கியுள்ளது. 
அதன்படி மாவட்டத்தில் 4  நகராட்சிகளில் 219 வாக்குச்சாவடிகள்,  7 பேரூராட்சிகளில்  111 வாக்குச் சாவடிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1784 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 2114 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
கடந்த 2011 தேர்தலின்போது அனுமதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையைவிட தற்போது 71 வாக்குச் சாவடிகள் கூடுதலாக உள்ளன.  
வாக்குச்சாவடிப் பட்டியலில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்கள் ஏதும் கொடுத்தால், அவற்றை பரிசீலித்து,  தேவைப்பட்டால் உரிய திருத்தங்களுடன் இறுதி வாக்குச்சாவடிப் பட்டியலானது மே 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்றார். 
ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) அ.கணேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் உள்ளிட்டோரும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 
ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 56 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 66 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com