ராமநாதபுரம்

கல்வித் துறை அலுவலகப் பணியாளர்கள் 31 பேருக்கு இடமாறுதல் உத்தரவு

31st Jul 2019 07:45 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அலுவலகப் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் 31 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கான மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பங்கேற்றனர்.  
கலந்தாய்வில் அலுவலகக் கண்காணிப்பாளர்கள் 2 பேர் பங்கேற்றனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுந்தரேசன் மண்டபம் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு இடமாறுதல் பெற்றார். மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் சமயமுரளி ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு  இடமாறுதல் பெற்றார். 
கலந்தாய்வில் உதவியாளர்கள் 9 பேர், தட்டச்சர்கள் 6 பேர், இளநிலை உதவியாளர்கள் 14 பேர் என மொத்தம் 31 பேருக்கு மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் உத்தரவை முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் வழங்கினார். 
பணிநிரவல் கலந்தாய்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்தை விட  331 பேர் கூடுதலாக உள்ளனர். இந்நிலையில், 15 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடத்துக்கு கலந்தாய்வு மாறுதல் நடத்த மாநில கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் விரைவில் கூடுதல் பணியிட நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT