கடலாடியில் ஆப்பனூர் ந. ராஜ்குமார் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, தபால் துறைக் கண்காணிப்பாளர் (ஓய்வு) முனியசாமி தலைமை வகித்தார். தலைமைக் காவலர் (ஓய்வு) கூரியய்யா முன்னிலை வகித்தார். இதில், ஆகாயம் தேடும் ஆணிவேர் என்ற நூலினை, நாகர்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துப்பாண்டியன் வெளியிட, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் நவநீதகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
பூக்களின் குமுறல் என்ற நூலினை, திரைப்பட நடிகர் ஹலோ கந்தசாமி வெளியிட, முனியசாமி பெற்றுக்கொண்டார். உள்நெஞ்சின் சத்தங்கள் என்ற நூலினை, பாடகர் சர்புதீன் வெளியிட, ஆரைக்குடி ராமர் பெற்றுக்கொண்டார். இதில், இளங்கவி ந. ராஜ்குமார் ஏற்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து, இயற்கையின் அவசியம் உணர்வோம் செயற்கையின் ஆதிக்கம் தவிர்ப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இயற்கை ஆர்வலர் வெள்ளைப்பாண்டியன், சமூக ஆர்வலர்கள் மயில்வாகணன்,கருணாநிதி,பூப்பாண்டியன்,முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், நடிகர் காம்ளின் சுந்தரின் பல்சுவை நிகழ்ச்சியும், கலைமுதுமணி சர்புதீன், ஆரைக்குடி ராமர் ஆகியோர் இணைந்து வழங்கிய முகவை அலைகள் இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கடலாடி சமூகநல ஆர்வலர் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடலாடி நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். முன்னதாக, எல்.ஐ.சி. முகவர் வெங்கடாசலம் வரவேற்றார். முடிவில், சமூகநல ஆர்வலர் ராமசாமி நன்றி கூறினார்.