மாத ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமக் கோயில் பூசாரிகள் சங்கத்தினர் பரமக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் அன்புமாறன் தலைமை வகித்தார். மண்டல அமைப்பாளர் கோதாவரி முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்குவதோடு நலவாரிய சலுகைகள் தொடர்ந்தும், உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் அதை அமல்படுத்தவில்லை. அதனை அமுல்படுத்தி மாதம் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அரசு நியமிக்கும் அறங்காவலர்கள் குழுவில் கோயில் ஆகம பூஜை முறை தெரியாதவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இடம் பெறுகின்றனர்.
ஆகவே அந்த கோயில்களில் பூஜை செய்யும் பூசாரிகளையும் குழுவில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராமக் கோயில் பூசாரிகள் கலந்துகொண்டனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இதில், பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பூசாரிகளின் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூசாரி அமைப்பின் மாவட்ட இணை அமைப்பாளர் முத்து, விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேது, மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், பூசாரிகள் நலவாரிய அமைப்பாளர் ஐயப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.