கமுதி அருகே அடிப்படை தேவைகளுக்கு அரசு உதவியை எதிர்பாராமல் கிராம மாணவர் மன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து அவர்களே நிறைவேற்றி வருகின்றனர்.
கமுதி அருகே உள்ள சேர்ந்தகோட்டையில், 240- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக காவிரி குடிநீர் விநியோகம், போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் அடிப்படை வசதிகளுக்காக கிராம மக்கள் இடம்பெயர்வதை தடுக்கும் வகையில், இளைஞர்களின் சார்பில் கிராம மக்களின் ஒத்துழைப்போடு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயரில், 2016 ஜூன் 30 இல், மாணவர் நல மன்றம் தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தில் 70 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து, மாதந்தோறும் தலா நூறு ரூபாய் சந்தா வசூல் செய்கின்றனர்.
இந்நிலையில், கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, அரசு வழங்கிய ஆழ்துளைக் கிணற்றை, கூடுதலாக 2 லட்சம் ரூபாய் செலவு செய்து, மாணவர் நல மன்ற உறுப்பினர்களின் நன்கொடையால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளனர்.
இதன் மூலம் தினமும் 8 ஆயிரம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. பராமரிப்பு செலவுக்காக குடம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பராமரிக்க ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகள், பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.
இதேபோன்று, குளியல் தொட்டிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளனர். மேலும் சான்றிதழ்கள், நீட் உள்பட அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் இணைய தளவசதி ஏற்படுத்தியுள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் புத்தகங்களை கொள்முதல் செய்து, மாணவர்கள், இளைஞர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதேபோல் கிராமத்தில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு அகற்ற தவறும்பட்சம், அதனை அகற்றும் செலவுத் தொகையை, சம்பந்தபட்டவர்களிடமிருந்து வசூல் செய்யவும், கிராமத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைத்து அதனை பராமரிக்க ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.
இதுகுறித்து சேர்ந்தகோட்டை அப்துல்கலாம் மாணவர் நல மன்ற தலைவர் கார்த்திக் கூறியது: கிராம மக்கள், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டால், அதை நடைமுறைப்படுத்த ஆண்டுகள் பல ஆகிறது. இதனால் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, 2016 இல், தொடங்கப்பட்ட மாணவர் மன்றம், கிராம மக்களின் அடிப்படைதேவைகள் மட்டுமின்றி, விவசாயம் மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கவும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அடையாளம் கண்டு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த திட்டங்கள் தயார் செய்து, அதற்குண்டான பணிகள் நடந்து வருகின்றன. அரசின் திட்டங்கள் பெயரளவிற்கு மட்டுமே உள்ளதால், எங்களது கிராம மக்கள், மாணவர்களின் தேவைகளை மாத சந்தா, நன்கொடையாளர்களால் பூர்த்தி செய்யபட்டு வருகின்றன. வரும் 3 ஆண்டுகளில் சேர்ந்தகோட்டையில் அனைத்து தேவைகளும் பூர்த்தியடைந்த கிராமமாக உருவாக்குவதே, மாணவர் மன்றத்தின் நோக்கம் என்றார்.