ராமநாதபுரம்

பரமக்குடி அருகே அழகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

29th Jul 2019 09:10 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரசநகரி கிராமம் கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, காப்புக் கட்டி விரதமிருந்த பக்தர்கள் கரகம் எடுத்து வந்து, அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 
பின்னர், உற்சவர் அழகு முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்பாள் வீதி உலாவின்போது ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர், மூலவர் இந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை, பக்தர்கள் அக்கினிச் சட்டி, ஆயிரம்கண் பானை, பால்குடம் ஆகியவற்றை எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அம்மனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. 
விழாவில், அரசநகரி, மென்னந்தி, நாகாச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 
விழா ஏற்பாட்டினை, கோயில் அறங்காவலர் கு.கண்ணன், நிர்வாகி சுப்பம்மாள் குருந்தலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT