ராமநாதபுரம்

"மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தமிழக விவசாய ஆய்வுகளுக்கு முன்னுரிமை'

27th Jul 2019 07:56 AM

ADVERTISEMENT

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தமிழக விவசாயம் சார்ந்த ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதன் மூத்த ஆராய்ச்சியாளர் டேனியல் செல்லப்பா கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்று அவர் பேசியது: நம் நாட்டின் முக்கிய ஆதாரங்களான நீர், நிலம், காற்று ஆகியவை குறித்து மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நீர் மாசு, காற்று மாசுக்களை நீக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவை பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன. 
மிகக்குறைந்த விலையில் குடிநீர் தயாரிப்பு, தாமிரவருணி ஆற்று மாசைக் கட்டுப்படுத்துதல், மும்பை, சென்னை போன்ற நகர்களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விவசாயிகளுக்கான ஆய்வுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசப்பட்டு வருகிறது. 
வேளாண் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பல மாநிலங்கள் இம் மையத்தில் முறையிட்டு வருகின்றன. ஆனால், தமிழக விவசாயம் சம்பந்தமான ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும், பல பயிர் ரகங்களை இம்மையம் அறிமுகம் செய்து வருகிறது. அவை விவசாயிகளுக்கு லாபகரமான உற்பத்தியைத் தருவதால் வரவேற்பும் உள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் நிலக்கடலை, உளுந்து மற்றும் நெற்பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இம் மையம் உருவாக்கிய உளுந்து வகைகள் தேசிய அளவில்  50 சதவீத அளவுக்கு பயிரிடப்பட்டு வருகிறது. ஒரு புதிய ரகத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் 7 முதல் 9 ஆண்டுகள் பாடுபடவேண்டியுள்ளது.
சேலம் பகுதியில் துவரம் பருப்பு, நெல்லை பகுதியில் கடலை, உளுந்து என பல நல்ல லாபகரமான உற்பத்தியைத் தரும் பயிர்களை இம் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இம் மாவட்டத்திலும் புதிய ரக பயிர்களை அறிமுகப்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார். 
பின்னர் அவரிடம் விவசாயிகள், ராமநாதபுரத்துக்கு கடும் வறட்சியை தாங்கி 90 நாளில் விளைச்சல் தரும் நெல் ரகம் அவசியம். நோயால் தாக்கப்படாத, வறட்சியைத் தாங்கும் தோட்டப் பயிர்களும் அவசியம் என முறையிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT