கமுதி கோயில்களில் ஆடி கார்த்திகை மற்றும் 2 ஆவது ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
கமுதியில் உள்ள ராமநாதபுரம் தேவஸ்தானம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களின் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. பூஜையை முன்னிட்டு வள்ளி, தேவசேனா, முருகன் கடவுள்கள் பட்டாடையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதே போல் கமுதி தெற்கத்தி நாடார் பங்காளிகளுக்கு பாத்தியமான வீரமாகாளியம்மன் கோயிலில் 15 ஆவது ஆண்டாக ஆடி வெள்ளி உற்சவம், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், வேப்பிலை சகிதமாக, அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு வெல்ல கட்டியுடன் கேப்பை கூழ் பிரசாதம் வழங்கபட்டது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கமுதி முத்துமாரியம்மன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அனைவருக்கும் பிரசாதமாகக் கூழ் வழங்கப்பட்டது.