ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே விவசாய நிலங்களில் மணல் திருட்டு

22nd Jul 2019 09:32 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே  விவசாய நிலங்களில் அனுமதியின்றி சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதுகுளத்தூர் அருகே திருவரங்கம், கொளுந்துறை வயல் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம், தனி நபர் பட்டா நிலம் போன்றவற்றில் அனுமதியின்றி சவுடு மண் என்ற பெயரில் மணலைத் திருடி சிலர் குவாரிகள் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பகுதியில் விவசாயிகளிடம் மணல் குவாரி உரிமையாளர்கள் சிலர் மிக குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி சவுடு மண் குவாரி அமைத்து வருகின்றனர். விவசாய நிலங்களில் 10 அடிக்கு கீழ் ஆற்று மணல் இருப்பதைத் தெரிந்து கொண்ட சிலர், விளை நிலங்களை மலிவான விலைக்கு வாங்கி விதிகளை மீறி 100 அடிக்கு மேல் தோண்டி மணல் அள்ளுகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும்,  கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இது போன்ற மணல் திருட்டால் விளை நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒரே இடத்தில் சுமார் 20 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இது குறித்து, வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் திருட்டையும் தடுக்கவில்லை. இப்பகுதியில் லாரிகள் மூலமாக இரவு, பகலாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. எனவே, இப்பகுதியில் விவசாய நிலங்களில் நடைபெறும் மணல் திருட்டை மாவட்ட நிர்வாகம் விரைந்து தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT