சாமானிய மனிதருக்கு நீதி மறுக்கப்படும் போது அவரது வாழ்க்கையில் அச்சம் ஏற்படும் என ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஆர்.சண்முகசுந்தரம் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக நீதி தின விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்ட விழிப்புணர்வு வாகனப் பேரணியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தனி மனித உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை நீதி மறுக்கப்படும்போதோ அல்லது தாமதிக்கப்படும் போதோ மக்களின் வாழ்க்கை முறையானது அச்சத்துக்குள்ளாகிறது.
நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ளவுமே ஆண்டுதோறும் ஜூலை 17-ஆம் தேதியை சர்வதேச நீதி நாளாகக் கடைபிடிக்கிறோம். நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமல் இருக்க, இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைபிடிக்கவும் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்ட விழிப்புணர்வுப் பிரசார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்த அவர் சட்டவிழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி வி.வி.தனியரசு, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.கே.ரபி, முதன்மை குற்றவியல் நீதிபதி எஸ்.சுஜாதா, சார்பு நீதிபதி எம்.பிரீத்தா மற்றும் இரண்டாவது நீதித்துறை நடுவர் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.