ராமேசுவரம் - சென்னை செல்லும் விரைவு ரயில்களில் புனித ஹஜ் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ரயில்வே பொது மேலாளர் மற்றும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: புனித ஹஜ் பயணம் மெற்கொள்ளும் பயணிகள் ஜூலை மாத இறுதியிலிருந்து தொடர்ந்து புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். ராமேசுவரம் பகுதிகளிலிருந்து செல்லும் ஹஜ் பயணிகள் ரயில்கள் மூலம் சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் மெக்கா செல்வர்.
ரயில் மூலம் சென்னைக்கு செல்லும் ஹஜ் பயணிகளை வழியனுப்ப அவர்களது உறவினர்களும் சென்னை வரை சென்று வருகின்றனர். இதனால் ரயில்களில் போதிய முன்பதிவு மற்றும் தக்கல் பயணச்சீட்டு கிடைக்காமலும், ரயில்களில் இடநெருக்கடியிலும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே தென் மாவட்டங்களில் உள்ள ஹஜ் பயணிகள் வசதிக்காக ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி முடிய 5 நாள்கள் ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.