துபையில் எரி வாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளி குடும்ப பாதுகாப்பு நிதி வழங்ககோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கடலாடி தாலுகா சிறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(38). இவர் தனது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் மனு அளித்தார்.
மனு குறித்து அவர் கூறியது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபையில் சோனாப்பூர் என்ற இடத்தில் கொத்தனார் வேலைக்காக சென்றேன். அங்கு ஒரு ஆண்டு கொத்தனார் வேலையும், 5 மாதகாலம் துப்புரவு பணியும் செய்து வந்தேன். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்15 இல் துபையில் பணி செய்த இடத்தில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானேன். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முறையான சிகிச்சை கிடைக்காததால் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டேன். தொழில் செய்ய முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பம் வாழ்வதற்கு வழியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணி செய்த இடத்திலும் எனக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. முறையான மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளவும் வசதி இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.