இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் மீன்வளர்ச்சித்துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்தவர் பாலவன்னியன். இவரது மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் நம்புதாளையைச் சேர்ந்த சங்கர் (47), நாகூர் (28), அவரது சகோதரர் கவியரசன் (20) மற்றும் பள்ளி மாணவர் ராஜ் (17), செட்டி (38), மோர்ப்பண்ணையைச் சேர்ந்த கிருஷ்ணன் (53) ஆகியோர் வியாழக்கிழமை (ஜூலை 11) மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்களை நெடுந்தீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரயும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மீன்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் கே.காத்தவராயனிடம் அக்கிராமத்தினர் மனுகொடுத்தனர்.
கைதான மீனவர் கிருஷ்ணன் மனைவி அங்கயற்கண்ணி, மோர்ப்பந்தலைச் சேர்ந்த துரை.பாலன், கோவிந்தன், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் மனுக் கொடுக்க வந்திருந்தனர். அவர்களிடம் மனுவைப் பெற்ற மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர், இதுகுறித்து அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.