ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

15th Jul 2019 07:29 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் பள்ளிகளில் சுற்றுச்சூழல் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பிரசாரக் கலை நிகழ்ச்சி ராமேசுவரம், வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, புதுரோட்டில் உள்ள நடராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வேதாளை வலையர்வாடி கிராமத்தில் நடைபெற்றது. 
ராமேசுவரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.மகேஷ் தலைமை வகித்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் தேவசகாயம்,  தலைமை ஆசிரியர் சூசை ரெத்தினம், புது ரோடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல்,  ராமேசுவரம் அரிமா சங்கத் தலைவர் ஜெயசீலன், காருண்யா கலைக்குழு மேலாளர் கமலா, தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்  ஜெரோம் மற்றும் ஆசிரியர் ஜஸ்டின் சின்னத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர். 
 இந்நிகழ்ச்சியில் 10 பேர் அடங்கிய ராமநாதபுரம் காருண்யா கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், மக்கும் குப்பை மக்காத குப்பைகளைத் தரம் பிரித்தல், கடற்கரை மற்றும் சாக்கடையில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீமைகள், மழை நீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள், கடற்கரையை தூய்மையாகப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்,  கடலோர கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுற்றுச்சூழல் துறை சார்பில் துணிப் பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் செய்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT