ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியர் ஒப்புதல்

15th Jul 2019 07:29 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படாத புத்தகத் திருவிழாவை மீண்டும் நடத்துவதற்கு ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
 ராமநாதபுரத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 3 முறை புத்தகத் திருவிழா பபாசி அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் அமைப்பினர் மூலம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புத்தகத் திருவிழா நடத்தப்படவில்லை.  
 ஆகவே மீண்டும் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கு ராமநாதபுரத்தில் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சங்கத்தின் செயலர் டாக்டர் வான்தமிழ் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாக உதவியுடன் புத்தகத் திருவிழாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 
 திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக வெள்ளிக்கிழமை மாலையில் ஆட்சியர் கொ.வீரராகவராவை ஆட்சியர் அலுவலகத்தில் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கத்தினர் சந்தித்தனர். 
  அப்போது புத்தகத் திருவிழாவை அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் நடத்த ஆலோசனை வழங்கிய ஆட்சியர் அதற்கான முழு ஒத்துழைப்பையும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.   மாவட்ட ஆட்சியரை கலை இலக்கிய சங்கச் செயலர் வான்தமிழ் மற்றும் சங்க நிர்வாகிகள் என்.அறிவழகன், பி.ராமலிங்கம், வி.ஸ்டாலின், எஸ்.சங்கவி மற்றும் ராமநாதபுரம் பத்திரிகையாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT