திருவாடானை நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், கணவன் மனைவி பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 229 -க்கு தீர்வு காணப்பட்டன. இதில் திருவாடானை தாலுகா நம்புதளை கிராமத்தைச் சேர்ந்த கோமதி (25) என்பவருக்கும், அதே பகுதி படையாச்சி தெருவைச் சேர்ந்த செல்வம் (30) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கோமதி 5 மாத கர்ப்பிணியாக இருந்து போது, வெளிநாடு சென்ற செல்வம் ஊர் திரும்பவில்லை. அதன் பின்னர் கோமதி திருவாடானை நீதிமன்றத்தில் தனக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் தலைமையில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் நாகராஜன் முன்னிலையில் கணவன், மனைவி இருவரையும் சமரசம் செய்து சேர்த்து வைத்தனர். இதில் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் ரமேஷ், முன்னாள் தலைவர் கார்த்திகேயன், மற்றும் வழக்குரைஞர் ராம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.