ராமநாதபுரம்

பரமக்குடி-எமனேசுவரம் தரைப்பாலம் சேதம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

12th Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

பரமக்குடி-எமனேசுவரத்தை இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் தடுப்புச் சுவர்கள்  சேதமடைந்துள்ளதால் விபத்துகள் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  பரமக்குடி வைகை ஆற்றின் வலது கரையில் பரமக்குடி நகரும், இடது கரையில் எமனேசுவரம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் எளிதாக  வைகை ஆற்றை கடந்து செல்லும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் முன்பு தரைப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம்  சந்தைக்கடைத் தெரு  வழியாக, எமனேசுவரம் செல்லும் சாலையுடன் இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.  இதனால் இரு பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  வைகை ஆற்றின் மேம்பாலத்தை சுற்றி 5 கி.மீ தூரம் கடந்து வந்த நிலை மாறி, எளிதாக ஆற்றின் குறுக்கே சென்று வரும் நிலை உருவானது. இந்த பாலத்தை மாணவ, மாணவிகள் , பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளன. 
இந்நிலையில் இப்பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர் மிகவும் சேதமடைந்து விட்டது. இதனை  நகராட்சி நிர்வாகம் பெயரளவில் மட்டுமே சரிசெய்துள்ளது. இப்பாலத்தை பராமரிப்பு செய்வது பொதுப்பணித்துறையா, நகராட்சி நிர்வாகமா என்பதிலும் குழப்பம் நீடித்து வருகிறது.
  இதனால் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைப்பது யார் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதனால் தரைப்பாலத்தை முறையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT