ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 7 மணி நேரம் மின் தடை

4th Jul 2019 08:02 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்திற்கு வரும் உயரழுத்த மின் கம்பத்தில் உள்ள பீங்கான்கள் சேதமடைந்ததால் புதன்கிழமை அதிகாலையில் இருந்து 7 மணிநேரம் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் துணை மின் நிலையத்திற்கு வரும் உயரழுத்த இணைப்பு பாம்பன் பாலம் வரையில் அதிக திறன் கொண்ட வயர் மூலம் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பகுதியில் இருந்து ராமேசுவரம் வரையில் உயர் மின் கம்பத்தின் மின்கம்பிகள் மூலம்  மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், ராமேசுவரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உயர் மின் கம்பங்கள் மூலம் செம்பு கம்பிகள் வழியாக மின்சாரம் கொண்டு வரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்பு கம்பிகள் அனைத்தும் மாற்றப்பட்டு அலுமினிய மின் கம்பிகள் பொருத்தப்பட்டன. மேலும் மின் கம்பத்தில் உள்ள இணைப்பு பகுதி பீங்கன் கடல் காற்று காரணமாக உப்பு படிந்து மின் அழுத்தம் அதிகளவில் வரும் போது அவை சூடு அதிகரித்து உடைந்து இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. 
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்ட மின் தடை காலை 8 மணி வரையில் நீடித்தது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதிலும் தூக்கிமின்றி தவித்தனர்.  இது குறித்த மின்வாரிய மாவட்ட அதிகாரி கூறியதாவது: பாம்பன் பகுதியில் இருந்து வரும் உயர் மின் அழுத்த மின் கம்பங்களில் உள்ள பீங்கனில் உப்பு படிந்து மின் அழுத்தம் காரணமாக பீங்கன் சூடாகும் போது மின் தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அனைத்து மின் கம்பிகளிலும் உள்ள பீங்கன்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
இருளில் மூழ்கிய ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு மேல் மின்தடை ஏற்பட்டது. அரண்மனை, வண்டிக்காரத் தெரு, பேருந்து நிலையப் பகுதி, அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் உள்ள சேதுபதி நகர் என பெரும் பகுதிகளில் இந்த மின்தடை ஏற்பட்டது. 
இதுகுறித்து மின்சார வாரியப் பொறியாளர்களிடம் கேட்ட போது, வழுதூர் பகுதியில் மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணி நடந்துவருகிறது என்றனர். ஆனால், நகரில்  இரவு 11மணிக்கும் மேலாகவும்  மின்சாரமின்றி மக்கள் அவதியுற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT