ராமநாதபுரம்

காவலருமில்லை; கண்காணிக்க கேமிராக்களும் இல்லை! அடிப்படை வசதிகளின்றி செயல்படும் ராமநாதபுரம் ரயில் நிலையம்

4th Jul 2019 07:55 AM | வ. ஜெயபாண்டி

ADVERTISEMENT

நாட்டிலேயே 117 ஆண்டுகள் மிகப்பழமையான ராமநாதபுரம் ரயில் நிலையம் காவலர், கண்காணிப்புக் கேமிரா மற்றும் குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏதுமின்றி செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
 ராமநாதபுரத்தில் கடந்த 1902 ஆம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 117 ஆண்டுகளைக் கடந்து நாட்டின் மிகப்பழமையான ரயில்நிலையங்களில் ஒன்றாக உள்ளது. 
 மூன்று நடைமேடைகளைக் கொண்டுள்ள இந்த ரயில் நிலையத்தை தினமும் மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட பகல், இரவு என சுமார் 31 முறை ரயில்கள் கடந்து செல்கின்றன. வாராந்திர ரயில்களாக கன்னியாகுமரி, கோவை, திருப்பதி, புவனேஷ்வர், வாரணாசி, ஓஷா, ஆஜ்மிர், அயோத்தி ஆகிய இடங்களுக்கும் ரயில்கள் சென்று வருகின்றன. 
 ரயில் நிலையத்தை தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். ஆனால், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. பயணச்சீட்டு வாங்கச் செல்வோருக்கு போதிய இருக்கை வசதியில்லை. மேலும், தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரமும் முழு நேரமும் இயங்குவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, ஒரே ஒரு கவுண்டரில் மட்டுமே பயணச்சீட்டு வாங்க வேண்டி உள்ளது.
 இங்கு முதல் நடைமேடையில் மட்டுமே சிறிய கழிப்பறைகள் உள்ளன. அவற்றை ஓரிருவர் மட்டுமே பயன்படுத்தமுடியும். குறிப்பாக பெண்களுக்கு போதிய தனிக் கழிப்பறைகள் இல்லை. இரண்டாவது, மூன்றாவது நடைமேடைகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை. குடிநீர் வசதிகளும் செய்து தரப்பட வில்லை.  இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான மிகச் சிறிய ஓய்வு அறை இருந்தும் அதில் கழிப்பறை இல்லை.
 ரயில் நிலையத்துக்கு வரும் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் வெட்ட வெளியில் பாதுகாப்பற்ற நிலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், மாதம் குறைந்தது 5 இருசக்கர வாகனங்களாவது திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
 மேலும், ஆட்டோக்கள் நிறுத்துமிடமாகவே ரயில்நிலைய முன்பகுதி மாறிவிட்டது. 
 ரயில் நிலைய துப்புரவுப் பணியில் 2 ஊழியர்களே உள்ளனர். இதனால், ரயில் நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் சுகாதாரமற்ற நிலையிலேயே உள்ளன.  போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லாததால், இரவில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. 
ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு மிகச்சிறிய அறையே தரப்பட்டுள்ளது. அங்கும் சார்பு ஆய்வாளர் தலைமையில் 6 பேர் உள்ளனர். 
இதில் 4 ஏட்டுகள் இருக்க வேண்டிய நிலையில் 2 பேரும், 6 காவலர் இருக்கவேண்டிய இடத்தில் 4 பேரும் உள்ளனர். மேலும் ரயில்வே போலீஸார் நியமிக்கப்படாததால், செல்லிடப் பேசி, நகைகள் திருடுபோனால், சம்பந்தப்பட்டோர் ராமேசுவரம் ரயில்வே போலீஸிலேயே புகார் தர முடியும். 
 ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை நோக்கி வரும் ரயில்களில் ராமநாதபுரம் பகுதியில் திருடுபோனால், பயணிகளால் மீண்டும் ராமேசுவரம் சென்று புகார் அளிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பலரும் தங்களது நகை, பணம் திருட்டு குறித்து புகார் அளிக்காமலே செல்வதாக கூறப்படுகிறது.
ரயில் நிலையத்துக்குள் செல்ல இரு வழிகள் உள்ளன. ஆனால், எந்த வழியிலும் பாதுகாப்புக்கு ஆளில்லை. சோதனையிடும் சாதனங்களும் அமைக்கப்பட வில்லை. ரயில் நிலையத்தில் எங்கும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வில்லை. இதனால்,  இரவில் நடைமேடையில் தங்கும் பயணிகளின் பொருள்கள் அடிக்கடி திருடப்படுகின்றன.
 வளர்ந்து வரும் மாவட்டமாக ராமநாதபுரத்தை மத்திய அரசு தேர்வு செய்த நிலையில், ரயில்நிலையத்தில் அடிப்படை வசதியைக் கூட செயல்படுத்தாமலிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, ராமநாதபுரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ளது. விரைவில் அப்பணிகள் தொடங்கும். பயணிகளுக்கான கூடுதல் கழிப்பறைகள் உள்ளிட்டவை கட்டித்தரப்படும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT