ராமேசுவரத்தில் விநோத எலும்பு பாதிப்பால் அவதியுற்றுவரும் பெண்ணுக்கு உதவிடுமாறு அவரது குடும்பத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகநாதன்-நாகராணி தம்பதியின் மகள் அருணாவுக்கு (19) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு மதுரை உள்ளிட்ட இடங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எலும்பு முறிவு தற்காலிகமாக குணமான நிலையில், அவருக்கு அடிக்கடி எலும்பு முறியும் விநோத நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சுமார் ரூ.15 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநரான சண்முகநாதனால் மகளுக்கு பல லட்சம் செலவழித்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையடுத்து அருணா, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர வாகனத்தில் அமர்ந்தே வெளியே சென்றுவருகிறார். அவருக்கு திடீரென எலும்புகள் உடைந்து பாதிக்கப்படுவதும், பின்னர் அவை இணைவதுமாக உள்ளது என அவரது தாய் நாகராணி கூறுகிறார். ஆகவே பெண்ணின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மருத்துவ உதவி வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகராணியின் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மருத்துவ இணை இயக்குநருக்கு பரிந்துரைத்து பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
பொன்குளம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.வி.தியாகராஜன் ஆட்சியரிடம் அளித்த மனுவில், கிராமத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உரிய அனுமதியின்றி கோயில் கட்டடம் கட்டப்படுவதாகவும், இதனால் நீராதரமான ஊருணி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.