ராமநாதபுரம்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

2nd Jul 2019 06:59 AM

ADVERTISEMENT

தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்னைகள் தீர கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை மக்களவையில் பேசியதாவது:
  ராமேசுவரத்திலிருந்து ஜூன் 26-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற செல்வராஜ், நம்புவேல், செல்வராசு, பாலகிருஷ்ணன் ஆகிய நான்கு ஏழை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் சம்பவங்கள் நீண்ட காலமாக தொடர்கின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலில் உள்ளது. கச்சத்தீவு விவகாரம் தீர்க்கப்படவில்லை. கச்சத்தீவை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட்டால் மீனவர்களின் முக்கியப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். மேலும், பாக் வளைகுடா பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சு.வெங்கடேசன் (மதுரை): மதுரை வெறும் நகரமல்ல; அது தமிழ்ப்பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரிகத்தின் தாயகம். உலகில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு இன்றைக்கும் வாழும் நகரமாக இருந்து வருகிறது. அண்மையில், மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை மதுரைக்கு அருகில் கீழடியில் நடத்திய அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எண்ணற்ற பொருள்களும் தொல்பழம் நாகரிகத்தின் சான்றுகளும் கிடைத்துள்ளன. அதில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இந்த நாகரிகத்தின் சான்றை இன்றைக்கும் உலகத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகள் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கிற ஒரே உலக நகரமாக மதுரை உள்ளது. எனவே, மதுரையை உலக பராம்பரிய நகரமாக, வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT