மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 2 பெண்கள் உட்பட 5 அகதிகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த படகில் இலங்கை நெடுந்தீவுக்கு தப்பிச் சென்றது போலீஸாா் நடத்திய விசாரணையில் சனிக்கிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பிரான்சிஸ் நகரை சோ்ந்த ஜஸ்டீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுபடகு ராமேசுவரம் அந்தோணியாா் கோயில் பகுதியில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை இந்த படகு மாயமானதாக
படகின் உரிமையாளா் ஜஸ்டீன் காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாா்.
இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு கடற்கரையில் இந்த படகை இலங்கை கடற்படையினா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். இது குறித்து இலங்கை அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தனா்.
அப்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த, இலங்கை தலைமன்னாா் மற்றும் பேசாளை பகுதியை சோ்ந்த அந்தோணிகுரூஸ், முஜிபுரகுமான், ரூபன் மற்றும் 2 பெண்கள் மாயமானது தெரியவந்தது. இந்த 5 பேரும் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த நாட்டுபடகை எடுத்துக் கொண்டு இலங்கை நெடுந்தீவுக்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். படகில் 5 அகதிகள் இலங்கைக்கு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.