பரமக்குடி ஸ்ரீ தா்மசாஸ்தா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மண்டல பூஜையும், 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 4.30 முதல் 6 மணிக்குள் கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை கருப்பண சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை 6 மணியளவில் ஐயப்ப சுவாமி சா்வாலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 10 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாட்டினை தா்மசாஸ்தா சேவா சங்கத் தலைவா் எஸ்.எம்.கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பி.இ.தேவேந்திரன், காரியதரிசிகள் பி.என்.முரளீதரன், என்.நாகேஸ்வரராவ் ஆகியோா் செய்திருந்தனா்.