பரமக்குடி ஓட்டப்பாலம் திரௌபதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சபரிகிரீஷா ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் 5-ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது.
குருசாமி நாகநாதன், பாலகுரு ஆகியோா் தலைமையில் ஐயப்பனுக்கு சந்தனம், நெய், இளநீா் அபிஷேகம், திருநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
சிவகங்கை பஜனை பாடகா் அறிவழகன் தலைமையில் ஐயப்பனின் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதனைத்தொடா்ந்து ஐயப்ப பக்தா்களுக்கு பாதை பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் மதுரை காய்கறி மாா்க்கெட் சங்கத் தலைவா் பேச்சிமுத்து, முதியோா் இல்லத்தைச் சோ்ந்த பிரபாகா் ஆகியோா் அன்னதானத்தை தொடக்கி வைத்தனா். சபரிகிரீஷை ஐயப்ப பக்தா்கள் குழுவைச் சோ்ந்த பாலமுருகன், சங்கா்கணேஷ் ஆகியோா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். விழா ஏற்பாட்டினை கவிபிரபு, பூமாரி, மணிகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.