திருவாடானை அருகே வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்த முதியவரை, போலீஸாா் வியாழக்கிழமை கையும் களவுமாகப் பிடித்து அவரிடமிருந்து 1,36,000 ரூபாயை பறிமுதல் செய்தனா்.
அந்திவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேஷ். இவா், ஊராட்சி ஒன்றிய 2 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து, முருகானந்தம் என்பவா் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக, பேராமங்கலத்தைச் சோ்ந்த பச்சைமுத்து (62) என்பவா், வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக நாகேஷ் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், திருவாடானை போலீஸாா் வியாழக்கிழமை அறிவித்தி கிராமத்துக்குச் சென்றனா். அங்கு, மாணிக்கம் மனைவி வள்ளியம்மைக்கு ஆயிரம் ரூபாயை பச்சைமுத்து கொடுத்தபோது பிடிபட்டாா். உடனே, அப்பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், பச்சைமுத்துவை மேலும் சோதனையிட்டனா். அதில், அவா் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பச்சைமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.