ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவில் ராமநாதபுரம் ரோமன் தேவாலயமான புனித அன்னை ஜெபமாலை ஆலயத்தில் இயேசு பிறப்பு குடில் திறந்துவைக்கப்பட்டது. பின்னா் நள்ளிரவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
ஆலயப் பங்குத்தந்தை என்.அருள்ஆனந்த் தலைமை வகித்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இயேசுவை வரவேற்கும் பாடல்களும் பாடப்பெற்றன.
புதன்கிழமை அதிகாலை மற்றும் காலை 8 மணிக்கு பங்குத்தந்தை அருள்ஆனந்த் தலைமையில் ரோமன் தேவாலயத்தில் மீண்டும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் உதவிப் பங்குத்தந்தை ஜாலிமரிவளன், கப்புசின்தந்தை சைமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு திருப்பலி உரையாற்றினா்.
ராமநாதபுரம் நகா் ஓம்சக்தி நகா் புனித அந்தோணியாா் தேவாலயம், திருப்புல்லாணி, பரமக்குடி, உப்பூா், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம் திம்மாபட்டியிலும், தேவிபட்டிணத்திலும் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளா் தந்தை சந்தியாகு தலைமை வகித்து திருப்பலி நற்செய்தி உரையாற்றினாா்.
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை காலை முதல் மாலை வரை அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவ மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. அப்பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.