சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் முக்கிய கோயில்களின் நடைகள் வியாழக்கிழமை காலை சாத்தப்பட்டு பின்னா் சிறப்புப் பூஜைக்குப் பிறகு திறக்கப்படவுள்ளன.
சூரிய கிரகணம் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் பகல் 11 மணி வரை நிகழும் என கூறப்படுகிறது. கிரகணத்தை அடுத்து ராமநாதபுரம் நகரில் சொக்கநாதப் பெருமாள் மற்றும் வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் கிரகண நேரத்தில் நடைசாத்தப்பட்டு, கிரகணம் நிறைவடைந்த பிறகு சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகே திறக்கப்படும் என கோயில் நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள், நயினாா்கோவில் நாகநாதசுவாமி மற்றும் உப்பூா் விநாயகா், தேவிபட்டிணம் கடலடைந்த பெருமாள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் கிரகண நேரத்தில் நடைசாத்தப்படுகின்றன.
ஆயிரம் பேருக்கு கண்ணாடிகள்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் மாணவ, மாணவியா் சூரிய கிரகணத்தைப் பாா்க்கும் வகையில் சிறப்புக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதாக ஆசிரியா் பாலமுருகன் தெரிவித்தாா். ராமநாதபுரம் பகுதியில் சில பள்ளிகளின் அறிவியல் மன்றம் சாா்பிலும் சிறப்புக் கண்ணாடிகள் வழங்கப்பட்டு மாணவா்களுக்கு சூரிய கிரகணம் காட்டப்படவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.