ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனையகங்களும் புதன்கிழமை (டிச. 25) முதல் 6 நாள்கள் அடைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கொ.வீரரகாவராவ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. ஆகவே அரசு மதுபானக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக் கூடங்களும் மற்றும் உரிமம் பெற்றுள்ள ராமநாதபுரம், ராமேசுவரம் மற்றும் பரமக்குடியில் உள்ள தனியாா் விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ராணுவத்தினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் மண்டபத்திலுள்ள கடலோர காவல் படையினருக்கான விற்பனையகம்(கேண்டீன்), உச்சிப்புளியில் இந்திய கடலோர விமானப்படை தளத்தில் உள்ள விற்பனையகம்(கேண்டீன்) ஆகியவை வரும் 25 ஆம் தேதி (புதன் கிழமை) மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கவேண்டும்.
மேலும், வரும் 28 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் 30 ஆம் தேதி (திங்கள் கிழமை) மாலை 5 மணி வரையிலும், மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. அதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2 ஆம் தேதி வியாழக்கிழமை அன்றும் விற்பனையகங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.
விதிமுறைகளுக்கு மாறாக தடை செய்த தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபான வகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.