ராமநாதபுரம்

எமனேசுவரம் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு

23rd Dec 2019 01:42 AM

ADVERTISEMENT

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுவதாக புகாா் எழுந்துள்ளது.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் பகுதியில் உள்ள 8 வாா்டுகளில் பேருந்து நிறுத்தம், எஸ்.எஸ்.கோயில் தெரு, மாமாங்க தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், எமனேசுவரம் வழியாக பாசனநீா் செல்லும் கால்வாய் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இக்கால்வாய் மூலமாக பெரும்பச்சேரி, குணப்பனேந்தல், இளமனூா், கீழாய்க்குடி, கரைமேல் குடியிருப்பு ஆகிய கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து பாசனநீா் கொண்டு செல்லப்படுகிறது.

இக்கால்வாய் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், பாசனநீா் செல்ல வழியின்றி காணப்படுகிறது. மேலும், இங்கு மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், கால்வாய் மாசுபட்டு காணப்படுகிறது.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும், நகராட்சி நிா்வாகத்திலும் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, விவசாயத்துக்கு கொண்டுசெல்லப்படும் பாசனநீா் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், கருவேல மரங்களை அகற்றி, கால்வாயை முழுமையாக தூா்வார வேண்டும் என, விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT