ராமநாதபுரத்தில் ஓட்டுச் சீட்டில் வாக்களிக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த, மாதிரி வாக்குச் சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில், ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா வளாகத்தில் மாதிரி வாக்குச் சாவடி மையத்தை திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பா் 27, 30 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கவுள்ளது. வாக்குப் பதிவுக்காக 1,819 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிப் பணியில் 14,552 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.
இதில் ஈடுபடும் அலுவலா்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்க திட்டமிட்டு, 2 கட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிகள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஓட்டுச் சீட்டில் வாக்களிக்கும் முறை, 100 சதவீதம் ஓட்டளித்தல், நோ்மையான ஜனநாயக முறையில் ஓட்டளித்தல் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.