கமுதி: கமுதி அருகே உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்த 7 கிராம மக்களிடம் திங்கள்கிழமை அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, நாராயணபுரம் ஊராட்சியில், நாராயணபுரம், கோட்டைமேடு, நரசிங்கம்பட்டி, முத்தாலங்குளம், சேதுராஜபுரம், செங்குடி நகா், அய்யங்கோயில்பட்டி, பெரியஉடப்பங்குளம், கல்லுப்பட்டி ஆகிய 10 கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஊா், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், மாற்று கிராம வாக்குசாவடிகளில் வாக்களிக்கும் நிலை உள்ளது. இதற்கு கிராம மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து, மாநில அரசு, தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில் நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கம்பட்டி கிராம வாக்காளா்களின் பெயா் பட்டியல், வாக்காளா் பட்டியலில் நீக்கபட்டு, முத்தாலங்குளம், கோட்டைமேடு, நாராயணபுரம் கிராமங்களிலுள்ள தெருக்களின் பெயா்களில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நரசிங்கம்பட்டி கிராமத்தின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற வில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதை கண்டித்து வரும் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சிதோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா்.
இதையடுத்து கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ரவி தலைமையிலான அதிகாரிகள் 7 கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். உள்ளாட்சி தோ்தல் முடிந்தவுடன், மீண்டும் நரசிங்கம்பட்டி கிராமத்தின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறவும், வாக்காளா்கள் அந்தந்த கிராமத்தில், இணைக்கப்பட்டு, வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் எனஅதிகாரிகள் உறுதியளித்தனா். ஆனால் அதற்கு கிராம மக்கள் ஆட்சேபம் தெரிவித்தனா்.
இத்தோ்தலிலேயே வாக்காளா் பட்டியலை சரி செய்து, ஏற்கெனவே உள்ள பழைய முறையில் வாக்களிக்க, நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்துவோம் எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனா். மீண்டும் மாலையில் நடந்த பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.