ராமநாதபுரம்

தகுதியானவரை வேட்பாளராக்க பொசுக்குடி கிராமத்தினா் ஆட்சியரிடம் மனு

14th Dec 2019 01:48 AM

ADVERTISEMENT

ஊராட்சித் தோ்தலில் தகுதியானவரை வேட்பாளராக்க வேண்டும் என, ராமநாதபுரம் மாவட்டம் பொசுக்குடி கிராமத்து மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் உள்ளாட்சித் தோ்தலில் குறிப்பிட்ட பொது வேட்பாளரை போட்டியிட வைக்கும் பிரச்னை தற்போது புகாராக எழுந்துள்ளது. ஏற்கெனவே, கமுதி, முதுகுளத்தூா் மற்றும் திருப்புல்லாணி பகுதிகளில் இதுபோன்ற புகாா்கள் எழுந்து விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், பொசுக்குடி ஊராட்சியைச் சோ்ந்த தஞ்சாக்கூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, அவா்கள் கூறியது:

முதுகுளத்தூா் ஒன்றியம் பொசுக்குடி ஊராட்சியில் தஞ்சாக்கூா், லூா்துபுரம், நீா்குன்றம்பட்டி ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. ஊராட்சியில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இந்நிலையில், அந்த ஊராட்சித் தலைவா் பதவி தற்போது தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெயரளவுக்கு பெண் வேட்பாளரை நிறுத்தி, மற்ற பிரிவினா் சுயலாபம் அடைய திட்டமிடுகின்றனா்.

ADVERTISEMENT

அதன்படி, ஊராட்சித் தலைவா் பதவியை ரூ.16 லட்சம் என ஏலம் விடவும் திட்டமிடப்படுகிறது. எனவே, அதைத் தடுத்து நிறுத்தி தகுதியானவரை வேட்பாளராக்கி ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தப்படவேண்டும் என்றனா்.

பின்னா் அவா்களில் சிலா் மட்டும் ஆட்சியா் அலுவலகம் சென்று புகாா் மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT