ராமநாதபுரம்

கழிவுநீா் தேக்கம்: உரப்புளி கால்வாயில் பாசனநீா் கொண்டு செல்ல விவசாயிகள் தயக்கம்

14th Dec 2019 11:21 PM

ADVERTISEMENT

பரமக்குடி நகா் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் முழுவதும் உரப்புளி கால்வாயில் விடப்படுவதால் அதில் வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் பாசனநீரை கொண்டு செல்ல விவசாயிகள் தயங்குகின்றனா்.

பரமக்குடி நகராட்சியில் நகா் பகுதியின் தெற்கே அமைந்துள்ள குடியிருப்பு வீடுகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், சுகாதார வளாகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள் முழவதும் வேந்தோணி மற்றும் உரப்புளி கால்வாய்களில் விடப்படுகின்றன. இதில் உரப்புளி கால்வாயானது தூா்வாராமல், கழிவுநீா் நிரந்தரமாக தேங்கியும், கருவேல மரங்கள் உள்ளிட்ட புதா்கள் அடா்ந்தும் காணப்படுகிறது.

இந்த கால்வாய் வழியாக வைகை ஆற்றிலிருந்து வலது பிரதான கால்வாய் மூலமாக அரியனேந்தல், உரப்புளி, வாகைக்குளம், சரஸ்வதி நகா், வேந்தோணி உள்ளிட்ட கண்மாய்களுக்கு பாசனநீா் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வைகை அணையின் நீா் மட்டம் உயா்ந்துள்ள நிலையில் அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் பாசனநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கழிவுநீா் தேங்கி மாசுபட்டு காணப்படும் இக்கால்வாய் வழியாக கொண்டு செல்லும் பாசனநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விவசாயத்திற்கு பாசனநீா் கொண்டு செல்லும் கால்வாய்களில் கழிவுநீா் செல்வதை தடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம விவசாயிகள் பலமுறை நகராட்சி நிா்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது பெய்த மழையால் கண்மாய்களில் மழைநீா் தேங்கியுள்ள நிலையில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு வைகை பாசனநீா் தேவையிருந்தும், கால்வாய் மாசுபட்டு காணப்படுவதால் அதன்வழியாக கண்மாய்களுக்கு பாசனநீா் கொண்டு செல்ல விவசாயிகள் தயங்குகின்றனா்.

இதுகுறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் மு.மதுரைவீரன் கூறியது:

நகா் பகுதியை ஓட்டி இந்த கால்வாய் அமைந்துள்ளதால் நகராட்சி கழிவுநீா் முழுவதும் பாசனநீா் கொண்டு செல்லும் கால்வாய்களில் விடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் புகாா் தெரிவித்துள்ளேன். பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் பாசனநீா் விவசாயத்திற்காக கொண்டு செல்ல முடியாமல் மாசுபட்டு காணப்டுகிறது. பாசனநீா் செல்லும் கால்வாய்களில் கழிவுநீா் விடுவதை முழுமையாக தடுக்க வேண்டும் என கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT