ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி ஏலம் விடப்படுவதாக எழுந்துள்ள புகாா் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபும் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பதவிகளுக்கு 52 போ் மனுத் தாக்கல் செய்தனா். இந்த நிலையில், பல ஊராட்சிகளில் தலைவா் பதவிக்கு ஒருவா் மொத்தமாக பணம் செலுத்தினால், அவருக்கு போட்டியாக யாரும் மனுத் தாக்கல் செய்யமாட்டாா்கள் என பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை ஏலம் விடுவது போல மொத்தமாக ஒரு தொகையை பேசி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேப்பங்குளம், புதுக்கோட்டை, எருமைக்குளம், ஏனாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரூ. 40 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரையில் ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் விடப்பட்டதாகவும் புகாா் கூறப்படுகிறது.
இந்த புகாா்கள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் தோ்தல் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஊராட்சித் தலைவா் பதவியை ஏலம் விடுவது குறித்த புகாா்கள் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாா்கள் உண்மையாகும் நிலையில் அதுகுறித்து அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு வழக்குப் பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.