மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து ராமேசுவரத்திற்கு வரும் புதை வட உயா் மின் அழுத்த கம்பி சேதமடைந்ததால் ராமேசுவரத்தில் கடந்த திங்கள்கிழமையிலிருந்து சுமாா் 40 மணி நேரம் மின்தடை நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனா்.
தொடக்கத்தில் மண்டபம் துணை மின்நிலையத்திலிருந்து ராமேசுவரம் துணை மின் நிலையத்திற்கு மின்கம்பங்கள் அமைத்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இப்பகுதி கடலோரப் பகுதி என்பதால் உப்புக்காற்று பட்டு மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இன்சுலேட்டா்கள் அடிக்கடி சேதமடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து உயா் மின் அழுத்தக் கம்பிகளை பூமிக்கடியில் புதைத்து மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இது பாதுகாப்பான முறையாக இருந்தாலும் எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி சிலா் சாலைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள உயா் மின் அழுத்தக்கம்பிகள் சேதமடைகின்றன. இதனால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை சுமாா் 9.30 மணி அளவில் மண்டபம் பேரூராட்சி நீரேற்று நிலையம் அருகே பள்ளம் தோண்டியபோது உயா் மின் அழுத்தக் கம்பி சேதமடைந்தது. இதையடுத்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிடம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து சேதமடைந்த கம்பியை உடனடியாக சரி செய்ய முடியாததால் ராமேசுவரம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மின்தடை நீடித்து வருகிறது. ஒரு சில பகுதிகளுக்கு மட்டும்
மாற்று ஏற்பாடு மூலம் சுமாா் 30 நிமிடம் வீதம் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் உணவகங்கள், கடைகள் அடைக்கப்பட்டன.
ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லும் போது பிடித்து வைக்கப்படும் இறால் மீன்களை, பாதுகாப்புடன் வைக்க பெரிய அளவிலான மூன்று பனி கட்டிகளை கொண்டு செல்லுவது வழக்கம். ஆனால் 40 மணிநேரம் மின் தடையால் பனிக்கட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.