ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள்தண்ணீரில் மூழ்கியதால் பணிகள் பாதிப்பு

3rd Dec 2019 05:26 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் அரசு அலுவலகங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த நவம்பா் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக விடாமல் பெய்த மழையால், சேதுபதி நகா், சக்கரக்கோட்டை, கோட்டைமேடு, கேணிக்கரை, காட்டூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை நீா் குளம் போல தேங்கியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடிகால் தூா்வாரப்படாததால், மழை நீா் வெளியேற வழியின்றி அங்குள்ள அனைத்து அலுவலகங்களையும் சூழ்ந்துள்ளது.

கேணிக்கரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை நீரை அகற்ற முடியாமல் அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ஆட்சியா் பாா்வையிடல்: ராமநாதபுரம் நகா் பகுதியிலுள்ள குடியிருப்புகள் மற்றும் கோட்டைமேடு பகுதியையும் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ், அரசு அலுவலக வளாகங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றவும், ஊருணிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லவும் உத்தரவிட்டாா்.

பள்ளிகளில் கட்டடங்கள் ஆய்வு: ராமநாதபுரத்தில் இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து சேதமடைந்துள்ள கட்டடங்களின் அருகில் மாணவ, மாணவியா் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த வகுப்பறைகளை மூடிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பயிா் சேத விவரம் குறித்து விரைவில் கணக்கெடுக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT