வெளியூரில் உள்ள தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வருவாய்துறையினர் அனுப்பி வரும் கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கமுதி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் பிழைப்புக்காக, வெளியூர்களில் தங்கி கூலி தொழில் செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியூர்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் படி கமுதி தாலுகா அலுவலகத்திற்கு சிலர் புகார்களை அனுப்பி வருகின்றனராம்.
அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி, கமுதி வருவாய்த்துறையினர் கடிதம் அனுப்பி வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி, கமுதி அருகே ஆரைகுடியைச் சேர்ந்த 110 வாக்காளர்கள், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, தங்களிடம் உள்ள ஆவணங்களை வழங்கி, முறையீடு செய்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை, கமுதி அருகே இலந்தைகுளம், கள்ளிக்குளம், பாம்புவிழுந்தான்கொட்டகை, கோவிலாங்குளம் கிராம வாக்காளர்கள் 261 பேர் கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, வட்டாட்சியர் மீனலோசனியிடம் மனு அளித்தனர்.
உரிய நடவடிக்கை இல்லாவிடில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரியுடன், அலுவலகத்தில் தங்கி குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
கமுதி தாலுகாவில் இது போன்று பல கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு விளக்க கடிதம் அனுப்பபட்டுள்ளதால் நாள்தோறும் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகார் வரும் கிராமங்களுக்கு சென்று உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூலி வேலைக்குச்
செல்லும் பொதுமக்களை அலைக்கழிக்க வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.