ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம்

29th Aug 2019 09:35 AM

ADVERTISEMENT

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேசுவரம் மீனவர்கள் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள படகுகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன், கருவாடுக்கு விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் - திருப்பதி ரயிலை மறித்து போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக மீனவ சங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் தலைமையில் மீனவ சங்க நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிகாரிகள் மீனவ சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த மீனவச் சங்கத்தினர் கூட்டத்தை விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் வியாழக்கிழமை திட்டமிட்ட படி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதனால் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT