கடலாடி அருகே சிக்கல் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற எருது கட்டு விழாவில் 3 பேர் காயமடைந்தனர்.
கடலாடி அருகே சிக்கல் கிராமத்தில் ஸ்ரீ எல்லை காத்த அய்யனார், ஸ்ரீதர்மமுனீஸ்வரர், உலகம்மன் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து , பொங்கல் வைத்தும் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு சிக்கல் கிராமத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் எருது கட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கிராமத் தலைவர் எஸ்.அங்குச்சாமி தலைமை வகித்தார். விழா கமிட்டி உறுப்பினர் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்க தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. சிக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காளைகளை அடக்கினர். இதில் காயமடைந்த பொட்டல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முத்திருளன் மகன் ராமையா (46) மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமைடந்த களநீர் மங்களத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மழைமேகு (52), ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சூரன் கண்ணன் மகன் ஆறுமுக வடிவேல்(35) சிக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர். விழாவை முதுகுளத்தூர், கடலாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளும், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.