ராமநாதபுரம்

மதுரை மண்டலத்தில் கடவுச்சீட்டு பெறுவதில் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாமிடம்: மண்டல கடவுச்சீட்டு அதிகாரி  தகவல்

28th Aug 2019 08:58 AM

ADVERTISEMENT

மதுரை மண்டல அளவிலான கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கையில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாமிடம் வகித்து வருகிறது என மண்டல கடவுச்சீட்டு அதிகாரி டி.அருண்பிரசாத் கூறினார்.
ராமநாதபுரத்தில் அஞ்சலகக் கடவுச்சீட்டு சேவை மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடவுச்சீட்டு மையத்தை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்  கே.நவாஸ்கனி திறந்து வைத்தார். 
விழாவுக்கு தலைமை வகித்து மதுரை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி டி.அருண்பிரசாத் பேசியது: கடவுச்சீட்டு பெறுவதை எளிமையாக்கும் வகையில் அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையம் செயல்படவேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். அதன்படி மதுரை மண்டலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 7  தொகுதிகளில் மையங்கள் செயல்படுகின்றன. தற்போது ராமநாதபுரத்தில் 8 ஆவது மையம் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல அளவில் கடவுச்சீட்டு பெறுவோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தே கடவுச்சீட்டைப் பெறுகின்றனர். ஆகவே மதுரை மண்டல அளவில் கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கையில் ராமநாதபுரம் இரண்டாமிடம் வகிக்கிறது. புனித ஹஜ் யாத்திரை செல்வோருக்காக மதுரை மண்டல அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது என்றார். 
நிகழ்ச்சியில் அஞ்சலகத்துறை மதுரை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் பேசியது: மாநில அளவில் 29 மக்களவைத் தொகுதிகளில் அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையம் செயல்படுகிறது.  நாட்டில் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களில் இதுவரை இதுபோன்ற மையங்கள் மூலம் 2.50 லட்சம் பேர் கடவுச்சீட்டுப் பெற விண்ணப்பித்து பயனடைந்துள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.8 கோடி பேர் மட்டுமே கடவுச்சீட்டு வைத்துள்ளனர் என்றார்.
 அஞ்சலகத் துறை தெற்கு மண்டல இயக்குநர் வென்னம் உபேந்தர் பேசியது: ராமநாதபுரம் மாவட்டம் மத்திய அரசின் வளரும் மாவட்டப் பட்டியலில் இடம் பெறுகிறது. ஆகவே இங்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்த மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 
நாட்டில் அஞ்சலகம் மூலம் சேமிப்பு உள்ளிட்ட வங்கிச் சேவைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. அஞ்சலகங்களில் 70 லட்சம் பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர் என்றார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.நவாஸ்கனி பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அன்னியச் செலாவணியை  நாட்டுக்கு ஈட்டித் தருகின்றனர். ஆகவே ராமநாதபுரம் அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையத்தில் தினமும் 40 பேர் விண்ணப்பிக்க உள்ள வசதியை மேலும் கூடுதலாக்க வேண்டும் என்றார். மதுரை மண்டல கடவுச்சீட்டு துணை அதிகாரி கே.பால்ரவீந்திரன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT