ராமநாதபுரம்

கடலாடி நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் இடையே மோதல்

28th Aug 2019 08:54 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி நீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு சங்க வழக்குரைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில்  இருக்கைகளை எடுத்துத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
கடலாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதி மன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டு 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தேர்வில் வெற்றி பெறாத சில நபர்கள், வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுவதாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மை நீதிபதிக்கு  கடலாடி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில்  கடந்த 8 ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. 
அந்த  மனுவில் கூறியிருப்பது: அகில இந்திய வழக்குரைஞர்கள் குழுமத்தின்  தகுதித் தேர்வில் வெற்றி பெறாத 19 பேர்  கடலாடி மற்றும் முதுகுளத்தூர் நீதிமன்றங்களில் வழக்குரைஞர் தொழில் செய்து வருகின்றனர். மேலும் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு  படித்து வழக்குரைஞராக பதிவு செய்துள்ள நபர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் கடலாடி, முதுகுளத்தூர் நீதிமன்றத்திற்கு வரும் சில நபர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் வழக்குரைஞர் தொழில் செய்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடலாடி நீதி மன்றத்திற்குள் கடலாடி வழக்குரைஞர் சங்கத்தினருக்கும், முதுகுளத்தூர் வழக்குரைஞர் சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஒருவரையொருவர் நீதிமன்றத்தில்  சேர்களைக்  கொண்டு தாக்கினர். தகவலறிந்த கடலாடி போலீஸார் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குரைஞர்களிடம் விசாரணை செய்தனர். இதுகுறித்து இரண்டு தரப்பு, வழக்குரைஞர்களும் புகார் அளிக்கவில்லை என போலீஸாரிடம் தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து இரண்டு சங்கங்களின் வழக்குரைஞர்களும் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT